அமேசான் அசோசியேட் திட்டத்தில் இணையும் முன்பு தெரிந்துகொள்ள வேண்டியவை
அமேசான் அசோசியேட் திட்டத்தில் நம்மில் பெரும்பாலானோர் இணைய விரும்புவோம். பிளாக் வைத்திருக்கும் பெரும்பாலானோர் தங்களின் பிளாக்கிற்கு டிராபிக் அதிகமாக கிடைத்தால், Affiliate marketing மூலமாக பணம் ஈட்ட முயற்சிப்போம். அவ்வாறு எண்ணுபவர்களுக்கு அமேசான் அசோசியேட்ஸ் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அமேசான் அசோசியேட்ஸ் திட்டம் குறித்த தகவல்களை பின்வருமாறு காண்போம்.
அமேசான் அசோசியேட்ஸ் திட்டம் என்றால் என்ன?
அமேசான் நிறுவனம் தங்களின் பொருளை விற்றுக் கொடுப்பவர்களுக்கு, அந்தப் பொருளுக்கு ஏற்றவாறு ஒரு தொகையை(பணம்) வழங்கும். இதுவே அமேசான் அசோசியேட் திட்டம் எனப்படும்.
அமேசான் அசோசியேட் திட்டத்தில் விண்ணப்பிக்கும் முறை:
அமேசான் அசோசியேட் திட்டத்தில் சேர்வதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அவற்றை பின்வருமாறு காணலாம்.
அந்தத் திட்டத்தில் சேர முதலில் ஒரு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். அதில் தங்கள் தளத்தின்/ பிளாக்கின் அடையாளத்தை குறிப்பிட வேண்டும். அமேசான் அசோசியேட் திட்டத்தின் நிபந்தனைகளுக்கு தங்களின் தளம் ஏற்புடையதாக இருந்தால் தங்களின் தளம் ஏற்றுக்கொள்ளப்படும்.
அமேசான் எந்தவிதமான தளங்களை தங்களின் திட்டத்தில் இணைத்துக் கொள்ளாது என்பதை, தங்களின் வலைத்தளத்தில் அமேசான் குறிப்பிட்டுள்ளது. அது என்னவென்று தற்பொழுது காணலாம்.
அந்த பதிவினை படிக்கும் வரையில், நானும் அமேசான் அசோசியேட் திட்டத்தில் எல்லாவிதமான வலைதளங்களும் இணையலாம் என்று நினைத்தேன். ஆனால், அதனை படித்த பின்பு தான் இதற்கும் சில நிபந்தனைகள் உள்ளது என்பதை நான் அறிந்தேன். அசோசியேட் திட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத சில தளங்கள் என்னவென்றால்,
- பாலியல் தொடர்பான செய்திகளை தளத்தில் வெளியிடுதல் அல்லது பாலியல் தொடர்பான பொருட்களை தளத்தில் ஊக்குவித்தல் போன்றவற்றை அந்த தளம் மேற்கொண்டு வந்தால், அந்த தளம் அமேசான் அசோசியேட் திட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது.
- வன்முறையை ஊக்குவிக்கும் பொருட்டு செய்திகளை வெளியிடுதல் அல்லது வன்முறை தொடர்பான பொருட்களை தளத்தில் ஊக்குவித்தல் போன்ற செய்திகளை அந்த தளம் மேற்கொண்டு வந்தாலும், அந்த தளம் ஏற்றுக்கொள்ளப்படாது.
- அவதூறான செய்திகளைப் பரப்புதல் அல்லது அவதூறான பொருட்களை ஊக்குவித்தல் போன்ற தளங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.
- இனம், பாலினம், மதம், தேசியம், இயலாமை, பாலியல், வயது போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாட்டை ஊக்குவிக்கும் தளங்களையும் இந்த திட்டம் ஏற்றுக்கொள்ளாது.
- சட்ட விரோதமான செய்திகளை ஊக்குவித்தல் அல்லது பொருளை ஊக்குவித்தல் போன்ற தளங்களும் இந்த அசோசியேட் திட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது.
நான் மேலே குறிப்பிட்டுள்ள தளங்களை நீங்கள் நிர்வகித்து வந்தால், உங்களால் அமேசான் அசோசியேட் திட்டத்தில் இணைய முடியாது.
இதுபோன்ற தளங்களை கொண்ட ஒருவர் அமேசான் அசோசியேட் திட்டத்தில் இணைய நினைத்தால், கண்டிப்பாக நிராகரிக்கப்படுவார்.
ஒருவேளை நீங்கள், நான் மேலே குறிப்பிட்டுள்ள தளம் அல்லாது சரியான தளத்தை அந்தத் திட்டத்தில் இணைத்துக்கொள்ள விரும்பினால், கண்டிப்பாக தங்களின் தளம் ஏற்றுக்கொள்ளப்படும். ஒருவேளை அசோசியேட் திட்டத்தால் தங்களின் தளம் ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்றால் வருத்தம் அடையாதீர்கள். மீண்டும் தங்களின் விபரம், தங்கள் தளத்தின் விபரம் போன்றவற்றை சரியாக அனுப்பி உள்ளீர்களா? என்பதனை சோதனை செய்து மறுபடியும் விண்ணப்பித்து பாருங்கள்.
அவ்வாறு செய்தால் கண்டிப்பாக இந்தத் திட்டத்தில் இணைக்கப்படுவீர்கள். திட்டத்தில் இணைக்கப்பட்ட பின்னர் தங்களின் மின்னஞ்சலுக்கு ஒரு செய்தி அனுப்பப்படும்.
உங்கள் தளத்திற்கான இணைப்புகள்:
உங்கள் தளம் அமேசான் அசோசியேட் திட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, உங்களுக்கு ஒரு லிங்க் வழங்கப்படும். அந்த லிங்கில் பொருளின் ட்ராக்கிங்(Tracking), ரிப்போர்ட்டிங் முதலியவை குறிப்பிடப்பட்டிருக்கும். பொருளை தங்கள் தளத்தில் விளம்பரப்படுத்துவதற்காக அமேசான் நிறுவனத்தால் சிறிது விளம்பர தொகையும் வழங்கப்படும். பொருளை தங்கள் தளத்தில் சரியாக விளம்பரப்படுத்தவில்லை என்றால், அமேசான் நிறுவனம் தங்களுக்கு வழங்கும் விளம்பர பணத்தில் சிறிது குறைக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே சரியாக விளம்பரம் செய்வது மிகவும் அவசியம்.
அலைப்பேசி, மடிக்கணினி போன்றவற்றில் பொருட்களை விளம்பரம் செய்ய தனித்தனியாக மென்பொருட்கள் உள்ளன. எனவே எந்த மென்பொருள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று ஆராய்ந்து உபயோகிக்க வேண்டும்.
தங்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள்:
அமேசான் அசோசியேட் திட்டத்தில் நாம் பங்கேற்ற பிறகு, தங்களுடைய வலைத்தளத்தைப் பற்றிய பெரும்பாலான தகவல்கள் அமேசான் நிறுவனத்தால் சேகரிக்கப்படும். நீங்கள் உங்களின் விவரங்களை சரியாக பதிவிடவில்லை என்றால், அமேசான் நிறுவனத்தால் கோரிக்கை வழங்கப்படும், நீங்கள் விவரங்களை குறிப்பிடவில்லை என்றால் உங்களுக்கான சில சலுகைகள் நிறுத்திவைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அவை என்னவென்றால்
- உங்களுக்கு வழங்கப்பட வேண்டிய விளம்பர கட்டணங்கள் நிறுத்தி வைக்கப்படலாம்.
- உங்களின் அமேசான் அசோசியேட் கணக்கை முடக்கம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.
அசோசியேட் திட்டத்தில் சேருவதற்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து இருந்தால், தங்கள் மின்னஞ்சலுக்கு அவ்வப்போது செய்திகள் வழங்கப்படும். பிறகு தங்கள் தளத்தின் செயல்பாடுகள், பார்வையாளர்களின் விவரங்கள், தங்கள் தளத்தின் இதர செய்திகளும் நிறுவனத்தால் சேகரிக்கப்படும்.
பயனர், தங்கள் தளத்திலுள்ள அமேசான் பொருளை கிளிக் செய்து பார்ப்பதனால், பயனர் பற்றிய விவரங்கள் மற்றும் பயனர்களின் செயல்பாடுகளும் நிறுவனத்தால் கண்காணிக்கப்படும்.
உங்கள் தளத்திற்கு நீங்களே பொறுப்பு:
சரி இனி ஒரு பிரச்சனையும் வராது. நம்மளோட தளத்தையும் அமேசானே நிறுவனமே பார்த்துக்கொள்ளும், என்று நீங்கள் எண்ணினால் அது மிகவும் தவறு. உங்கள் தளத்தை நீங்களே பாதுகாக்கவும் பராமரிக்கவும் வேண்டும். அமேசான் அதற்கு பொறுப்பேற்காது.
தங்கள் தளத்திற்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் அதை சரி செய்வது, தங்கள் தளத்தின் வேகம் குறைந்தால் அதை சரி செய்வது, தங்கள் தளத்திற்கான கட்டுரைகளை தயாரிப்பது போன்றவற்றை தாங்களே செய்ய வேண்டும். கண்டிப்பாக அதனை அமேசான் தங்களுக்கு செய்து தராது.
அனைவருக்கும் ஏற்புடையதான கட்டுரைகளை பதிவிடுவது மிகவும் அவசியம். தீங்கு விளைவிக்கும், துன்புறுத்தும், ஆபாசமான, அவதூறான, பாலியல் போன்றவை தொடர்பான கட்டுரைகளை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஆர்டர் கண்காணிக்கப்படும் முறை:
களத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளை நுகர்வோர் கிளிக் செய்து அமேசான் தளத்திற்கு உள் நுழைந்தவுடன், அமேசான் நிறுவனத்தால் அதில் டிராக் செய்யப்படும். ஒருவேளை அந்தப் பொருள் வரம்புகளுக்கு உட்படவில்லை என்றால், அமேசான் நிறுவனம் அந்தப் ஆர்டரை தடை செய்யும் வாய்ப்புகள் உள்ளது.
விளம்பர கட்டணம்:
அமேசான் நிறுவனத்தால் குறிப்பிடப்பட்ட சில பொருட்களுக்கு மட்டுமே விளம்பர கட்டணம் வழங்கப்படும். விளம்பர கட்டணம் எந்த மாதிரியான பொருட்களுக்கு வழங்கப்படும் போன்ற சில நிபந்தனைகளை ஏற்கனவே அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை என்னவென்றால்,
- உங்கள் தளத்தை பார்வையிட வரும் பார்வையாளர்கள் ஒரு சிறப்பு இணைப்பு மூலம் அமேசான் நிறுவனத்தின் தளத்திற்கு செல்வர்.
- அவ்வாறு அமேசான் தளத்திற்குச் சென்ற பார்வையாளர்கள், அந்த தளத்தில் உள்ள பொருளை தனது கணக்கில் சேர்த்து, 89 நாட்களுக்குள் அந்த பொருளை வாங்குவார்கள்.
- அந்தப் பொருளை சரிவர பெற்றபின், வாடிக்கையாளர் பணத்தை செலுத்துவர்.
- இந்த நிகழ்வு யாவும் சரிவர நடந்தால், அமேசான் நிறுவனம் அந்த பொருளுக்கு ஏற்றவாறு விளம்பர கட்டணத்தை தங்களுக்கு வழங்கும்.
நான் மேலே குறிப்பிட்டுள்ளவை முறையாக நடந்தால். அமேசான் நிறுவனம் தங்களுக்கு வழங்க வேண்டிய விளம்பர கட்டணத்தை தவறாமல் வழங்கிவிடும்.
விளம்பரக் கட்டணங்கள் செலுத்தப்படும் முறை:
விளம்பர கட்டணமானது பொருள், பொருளை வாங்குபவர்கள், வாங்கியவர்கள் செயல்முறை போன்றவற்றை சார்ந்தது. அதுவே டிஜிட்டல் பொருள் என்றால் அதனை பார்த்தவர்கள், அதனை பதிவிறக்கம் செய்தவர்கள் போன்றவற்றை சார்ந்தது.
ஒவ்வொரு மாதத்திற்கான விளம்பர கட்டணமும், அந்த மாதம் முடிந்து 60 நாட்கள் கழித்தே தங்களின் கணக்கில் ஏற்றப்படும். தங்களுக்கு வரவேண்டிய விளம்பர கட்டணம் 1,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், ஆயிரம் ரூபாய் எட்டிய பிறகே தங்கள் கணக்கில் அந்த தொகை சேர்க்கப்படும். தங்களுக்கு வழங்கப்படும் தொகைகள் அனைத்தும் வரிகளுக்கு உட்பட்டது.
விலை நிர்ணயம் மற்றும் கொள்கைகள்:
இந்த திட்டத்தில் பொருட்களை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் பெரும்பாலும் அமேசான் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள்.
தங்களுக்கும் அமேசான் நிறுவனத்திற்கும் (அமேசான் அசோசியேட் திட்டம்) இடையிலான கொள்கைகள், பொருளின் விலை, வியாபாரம், நுகர்வோர் பாதுகாப்பு முறை போன்றவை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். இது அசோசியேட் திட்டத்தில் உள்ளவர்களுக்கு போலவே வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என அமேசான் நிறுவனம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
அடையாளத்தை வெளிப்படுத்துதல்:
தாங்கள் அமேசான் நிறுவனத்தின் அசோசியேட் திட்டத்தின் உறுப்பினர் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது அவ்வளவு சிறப்பாக இருக்காது. நீங்கள் அவ்வாறு பதிவிடுவதனால் அமேசான் நிறுவனம் தங்களுக்கு எந்த விதமான சலுகைகளையும் கண்டிப்பாக வழங்காது.
சட்டங்களுடன் இணங்குதல்:
அமேசான் அசோசியேட்ஸ் திட்டத்தில் தாங்கள் இணைவதற்கு, இந்திய அரசின் சட்டங்கள், ஒழுங்கு முறைகள், உத்தரவுகள், உரிமங்கள் போன்ற அனைத்து சட்டங்களுக்கும் நீங்கள் இணங்குவீர்கள். அந்த திட்டத்தில் இணையும்போது அமேசான் நிறுவனம் இது போன்ற விஷயங்களை தங்களுக்கு வலியுறுத்தும்.
திட்டத்தில் இருந்து நீக்கப்படும் முறை:
அமேசான் அப்ளியேட் திட்டத்தில் இணைந்தவுடன் அமேசான் நிறுவனத்திற்கும் தங்களுக்குமான ஒப்பந்தம் தொடங்கிவிடும்.
நீங்கள் ஒருவேளை இந்த திட்டத்தில் இருந்து விலக நினைத்தால், நீங்கள் விலகிக் கொள்ளலாம். அமேசான் நிறுவனமும் தங்களை இந்த திட்டத்தில் இருந்து நீக்கும் வாய்ப்புகள் உள்ளது(நீங்கள் நிபந்தனைகளுக்கு உட்படவில்லை என்றால்). ஒருவேளை உங்கள் தளத்தில் உள்ள கட்டுரைகள் சரியாக இல்லை என்றாலும் நீங்கள் இந்தத் திட்டத்திலிருந்து அமேசான் நிறுவனத்தால் நீக்கப்படுவீர்கள் என்பது உறுதி. எனவே கட்டுரைகளை சரிவர சரியாக எழுதுவது மிகவும் முக்கியம்.இந்தத் திட்டத்தில் தொடர்வதும் நீக்கப்படுவதும் தங்கள் கையிலே உள்ளது.
ஒப்பந்தத்தில் மாற்றம்:
திருத்தப்பட்ட ஒப்பந்தம், ஆவணங்கள் மூலமாக அமேசான் நிறுவனம் தங்களின் நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மாற்றலாம். அமேசான் அசோசியேட் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை அமேசான் நிறுவனம் மாற்றுவதற்கான முழு அங்கீகாரத்தையும் கொண்டுள்ளது.
அவ்வாறு அமேசான் தங்களின் விதிமுறைகளை மாற்றினால், அமேசான் அசோசியேட் ஒப்பந்தத்தில் இணைந்தவர்களுக்கு கண்டிப்பாக அமேசான் நிறுவனத்தால் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும்.
அமேசான் நிறுவனத்திற்கும் தங்களுக்குமான உறவு:
திட்டத்தில் இணையும் அனைவரும் சுதந்திரமான ஒப்பந்ததாரர்கள். இந்த ஒப்பந்தத்தில் இணைவதன் மூலம் அமேசான் நிறுவனத்திற்கும் தங்களுக்கும் இடையிலான எந்த ஒரு கூட்டு முயற்சி, உரிமையாளர்க்கான மதிப்பு ஆகியவை வழங்கப்படாது.
அமேசான் அசோசியேட் திட்டத்தில் இணைவதன் மூலம் அமேசான் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்று நீங்கள் எண்ணினால் அது மிகவும் தவறு. அவ்வாறான வேலைவாய்ப்பினை அமேசான் நிறுவனம் எப்பொழுதும் வழங்காது.
இதுபோன்ற ஒப்பந்தங்களுக்கு நீங்கள் உட்பட்டால் மட்டுமே அமேசான் அசோசியேட் திட்டத்தில் நீங்கள் இணைய வாய்ப்பு கிட்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள செய்திகளை நன்கு படித்து அறிந்து, அமேசான் அசோசியேட் திட்டத்தில் இணையுங்கள். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
நன்றி சகோ
ReplyDelete