Pinterest என்பது என்ன? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்?




எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால்…
இதோ படம் இருக்கிறதல்லவா? அதில், பிரௌன் நிறத்தில் உள்ளது போர்டு (board); சிவப்பு நிறத்தில் உள்ளது தான் பின்(pin); மஞ்சள் நிறத்திலுள்ளது பின் செய்யப்பட்ட தகவல். இப்படி உங்களுக்கு 'இண்டரஸ்ட்'டான படங்களையும் தகவல்களையும் 'பின்' செய்து ஒரு போர்டில் இடுவதுபோல வழி செய்து கொடுப்பதுதான் பின்டரெஸ்ட்.
இப்போது இதையே இப்படி யோசித்து பாருங்கள் -- உங்களிடம் இதே மாதிரி நிறைய போர்டு இருக்கிறது; சமையல் குறிப்புகளுக்கு ஒரு போர்டு, கைவினை ஐடியாக்களுக்கு ஒரு போர்டு என்று தனித்தனியாக மாட்டி வைத்து அதில் pin செய்து வைத்தால் வசதியாக இருக்குமல்லவா?
இதெல்லாம் ஃபோன், லேப்டாப் போல் ஒரு கருவிக்குள் நடந்தால் எப்படி இருக்கும்? அது தான் Pinterest.
Pinterestஇல் போர்டு பார்க்க இப்படி தான் இருக்கும்‌.‌
இதை அழுத்தினால் நாம் அந்த தலைப்பு சம்பந்தமாக சேர்த்து வைத்திருக்கும் அனைத்தையும் பார்க்கலாம்
கூகுளில் சென்று “சாம்பார் செய்வது எப்படி?” என்று தேடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.‌ உங்களுக்கு கச்சிதமான குறிப்புடன் ஒரு இணையதளம் சிக்கி விட்டது. இன்னொரு முறை சாம்பார் செய்யும் போது இதையே பார்த்துக்கொள்ளலாம் என்றால் Pinterest இல் சேமித்து வைக்கலாம்.
எப்படிப் பயன்படுத்துவது?
(மடி)க்கணினியில் பயன்படுத்துவதாக இருந்தால் அல்லது இணையதளத்திலிருந்து நேராக Pin செய்ய விரும்பினால்
✔️ எந்த இணைய பக்கத்தை சேமிக்க வேண்டுமோ அந்த பக்கத்திற்கு செல்லவும். திரையின் வலது மூலையில் மேலே மூன்று புள்ளி இருக்கும்; அதை அழுத்தவும்

✔️ Share ஐ அழுத்தி Pinterestஐ தேர்ந்தெடுத்தால் அப்பக்கத்தில் உள்ள படங்களை தேடும்.
✔️ இருக்கும் படங்களில் ஒரு படத்தை தேர்ந்தெடுத்தால் உடனே எந்த போர்டில் பின் செய்வது என்று கேட்கும்‌.
✔️ போர்டு இருந்தால் அதுவே பட்டியல் காண்பிக்கும், புதிதாக பயன்படுத்துபவராக இருந்தால் Create board என்ற பொத்தானை அழுத்தி புதிதாக ஒரு போர்டை உருவாக்கி Pin செய்து கொள்ளலாம்.
✔️ யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்றால் Keep board secret என்பதை அழுத்தினால், அதன் பின் உங்களுக்கு மட்டும் தான் தெரியும்.‌
ஃபோனில் பயன்படுத்த போவதாக இருந்தால்,
✔️ செயலியை பதிவிறக்கி கொள்ளுங்கள்
✔️ பிறகு Log in செய்தால், உங்களுக்கு எந்த தலைப்புகளில் ஆர்வம் உள்ளதோ அவற்றை தேர்ந்தெடுக்கச் சொல்லும்‌. அது முடிந்ததும் நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பு சம்பந்தமாகப் பல படங்கள், கட்டுரைகள் காட்டும்.

பார்க்க இப்படி இருக்கும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு Pin.
✔️ இதில் எது வேண்டுமோ அதை அழுத்தினால் அந்த படம் பெரிதாகி, அந்த Pinஐ பின் செய்தவர் யார், எந்த இணையத்திலிருந்து வந்தது என்று இருக்கும்.
✔️இதிலிருக்கும் பொத்தானை அழுத்தினால் அந்த இணையத்திற்குக் கொண்டு செல்லும்.


இதோ இந்த குறிப்பு Hebbars Kitchenஇல் இருந்து சேமிக்கப்பட்டுள்ளது. Make it ஐ அழுத்தினால் நேராக அந்த இணையதளம் வந்துவிடும்
"அட போங்கயா! இவ்வளவு வேலை செய்யணுமா?" என்று நீங்கள் யோசித்தால், இன்னும் ஈசியாக ஒரு வழி இருக்கிறது!
நேராக Pinterest சென்று, நமக்கு என்ன வேண்டுமோ அதைத் தேடினாலே வந்து விடும். முக்கால்வாசி இணைய பக்கங்களை ஏற்கனவே யாராவது கண்டிப்பாகச் சேமித்திருப்பார்கள்!
தேடல் முடிவுகளில் பல Pin காட்டப்படும். எந்த பின் வேண்டுமோ அதை அழுத்தி Long press செய்தால் Pin செய்வது, அதன் linkஐ பகிர்வது, அதை மறைப்பது மற்றும் சமீபத்தில் நீங்கள் பயன்படுத்திய செயலிக்கு அனுப்புவது போன்றவை காட்டப்படும்.
இல்லையென்றால், பக்கத்தின் மேலே வலது மூலையில் இருக்கும் Save, Share பொத்தான்களை பயன்படுத்தலாம். உங்களுக்கு விருப்பமில்லாத தலைப்பை பற்றி Pin காணப்பட்டால், மேலே இருக்கும் மூன்று புள்ளிகளை அழுத்தி Hide pin கொடுத்தால், அது சம்பந்தமாக காட்டுவது குறைக்கப்படும்
அவ்வளவு தான்!
நன்றி : வைபவ் லக்ஷ்மி (Vybav Lakshmi)

1 Comments

  1. உங்களுடைய மிகச்சிறந்த பணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
Previous Post Next Post