ஆன்லைனில் பணம் ஈட்ட விரும்பும் பெரும்பாலான மக்கள் தற்பொழுது பிளாக்கிங்கை உபயோகிக்கின்றனர். என்ன தான் இணையத்தில் பலவிதமான வலைப்பதிவு மற்றும் வலைத்தளங்கள் இருந்தாலும், ஒரு சில குறிப்பிட்ட வலைப்பதிவு மட்டுமே தேடுதளங்களால் (அதாவது கூகிள், பிங் மற்றும் இதரவை) மதிப்பிடப்படும். அவ்வாறு நன்கு மதிப்பிடப்பட்ட வலைப்பதிவு(பிளாக்), தேடுதளங்களில், நாம் எதையாவது தேடும்பொழுது முதலில் நம் கண்களுக்கு தென்படும். நாமும் அந்த வலைப்பதிவை கிளிக் செய்து படிப்போம்.
இப்படி கிளிக் செய்து படிப்பதனால் என்ன நடக்கும்? என நீங்கள் யோசிப்பது புரிகின்றது. தேடுதளங்களால் நன்கு மதிப்பிடப்பட்டு முதன்மை நிலையில் இருக்கும் வலைப்பதிவிற்கு அதிகமாக டிராபிக் கிடைக்கும். அதாங்க பார்வையாளர்கள் அதிகமாக கிடைப்பார்கள். பார்வையாளர்கள் அதிகமாக ஒரு வலைப்பதிவிற்கு வந்தால், அந்த வலைப்பதிவிற்கு Google adsense Approval எளிதில் கிடைக்கும். Google Adsense மற்றும் Affiliate marketing முதலியவற்றால் அதிகமாக பணம் ஈட்ட இயலும்.
ஒரு வலைப்பதிவில் எவ்வாறு டிராபிக் அதிகரிப்பது? என்பதை காணலாம்.
1. தலைப்பு தேர்வு செய்யும் முறை:
என்ன தலைப்பு தேர்வு செய்வது? எது அதிக பார்வைகளை ஈட்டும்? போன்ற கேள்விகள் பிளாக்கிங் தொடங்கும் முன்பு நம்மில் பெரும்பாலானோருக்கு தோன்றும். என்னை பொறுத்த அளவில், உங்களுக்கு பிடித்த தலைப்பை தேர்வு செய்வது நல்லது. ஏன் என்றால் பிளாக்கிங் தொடங்க விரும்பும் அனைவரும் அதை முழுநேர பணியாக செய்ய முதலில் விரும்பமாட்டோம். கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அதிகமாக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பிளாக்கிங் தொடங்குவோம். இதனால் நம்மால் அதிக நேரம் வலைப்பதிவு எழுத நேரத்தை செலவழிக்க இயலாது. இதுவே நமக்கு பிடித்த தலைப்பை தேர்வு செய்து எழுதினால், நமது நேரம் விரயமாகுவதை தடுக்கலாம். வலைப்பதிவு(blog) எழுதுவற்கான தகவல்களை சேகரிக்க நிறைய நேரம் தேவைப்படாது.
2. சிறந்த செய்திகள், கட்டுரைகள்:
பிளாக்கில், நாம் எழுதும் சிறந்த பதிவுகளே பார்வையாளர்களை கவரும். ஆர்வத்தை தூண்டி நமது பதிவுகளை படிக்க வழிவகுக்கும். எனவே சிறந்த பதிவுகளை பதிவிடுவது அவசியம். பார்வையாளர்கள் என்ன பதிவுகளை விரும்புகிறார்கள், எந்த தலைப்பு பற்றிய செய்திகளை பார்வையாளர்கள் தற்பொழுது எதிர்பார்க்கின்றனர் போன்றவற்றை ஆராய்ந்து கட்டுரைகளை பதிவிட வேண்டும். இன்றைக்கு ஒரு தலைப்பில் செய்திகளை பதிவிட்டுவிட்டு, இன்னும் இரண்டு நாட்கள் கழித்து பிளாக் தலைப்பிற்கு பொருந்தாத ஒரு கட்டுரையை பதிவிடக்கூடாது. அவ்வாறு பதிவிட்டால் பார்வையாளர்கள் அந்த பதிவுகளை படிக்க விரும்பமாட்டார்கள். அதன் விளைவாக கூகிள் வலைப்பதிவின் தரத்தையும் குறைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
3. பிரபலமான தலைப்பு:
பழைய தகவல்கள் அல்லது தெரிந்த தகவல்களை பார்வையாளர்கள் படிக்க பெரும்பாலும் விரும்பமாட்டார்கள். தற்பொழுது பிரபலமாக இருக்கும் தலைப்புகளில் பதிவுகளை பதிவிட்டால் அதிகமான பார்வைகளை எளிதில் பெறலாம். அதுவே கூகிள் போன்ற தேடுதளங்களில் அதிகமாக தேடப்பட்ட தலைப்பாகும்.
4. தேடுதளங்களுக்கு ஏற்றவாறு தலைப்பை மேம்படுத்துதல்:
தேடுதளங்கள் வலைப்பதிவை மதிப்பிட சிறந்த வழிகளுள் ஒன்று தலைப்பு மற்றும் உட்தலைப்புகளை சரியான முறையில் தேர்வுசெய்து பதிவிடுவதே ஆகும். அவ்வாறு தலைப்புகளை சரியாக உபயோகிப்பதன் மூலம் தேடுதளங்களால், நமது வலைப்பதிவை ஆர்கானிக் தேடுதலில் முதன்மைப்படுத்த இயலும்.
ஆர்கானிக் தேடுதல் என்றால் என்ன? ஆர்கானிக் தேடுதல்(organic search) என்பது தேடுதளம் நமது வலைப்பதிவை முதன்மைப்படுத்துவது ஆகும். எந்த ஒரு பணமும் தேடுதளத்திற்கு வழங்காமல் நமது வலைப்பதிவுகளை முதன்மைப்படுத்துவது ஆர்கானிக் தேடுதல் ஆகும்.
கட்டுரைகளில் உள்ள தகவல்களை தெளிவாகவும் அனைவருக்கும் புரியும்படியான எளிய நடையிலும் பதிவிடவேண்டும். அதனுடன் Keywords சரியாக தேர்வு செய்து கட்டுரைகளில் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பிளாக்கிற்கு அதிக பார்வையாளர்கள் கிடைப்பார்கள்.
5. நீண்ட கிசொற்கள் (Long tail keywords):
புதியதாக பிளாக் தொடங்கியவர்கள் நீண்ட கிசொற்களில் கவனம் செலுத்துவது நல்லது. அப்பொழுது தான் இதர பிளாக்குடன் போட்டிபோட எளிதாக இருக்கும்.நீண்ட கிசொற்களில் மூன்றிற்கு மேற்ப்பட்ட கிசொற்கள் இருக்கும். இணையத்தில் ஒரு தகவலை தேடுபவர் என்ன சொற்களை பயன்படுத்தி தேடுவார் என ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு நீண்ட கிசொற்களை அமைக்க வேண்டும்.
குறுகிய கிசொற்கள்(short-tail keywords) டிராபிக் அதிகமாக உள்ள பிளாக்குகளால் பயன்படுத்தப்படும். குறுகிய கிசொற்களில் குறைந்தது இரண்டு கிசொற்களில் இருக்கும். டிராபிக் அதிகமாக உள்ள பிளாக்குகளுடன் போட்டிபோட புதியதாக ஆரம்பித்த பிளாக்குகளால் இயலாது. எனவே புதியதாக நீங்கள் பிளாக் தொடங்க விரும்பினால், நீங்கள் நீண்ட கிசொற்களில் கவனம் செலுத்துவது நல்லது. இதற்கு நீங்கள் SEO ஸ்பெசலிஸ்ட்டின் உதவியை நாடலாம்.
இணையத்தில் நிறைய வலைத்தளங்கள் SEO சேவையை வழங்குகின்றன. அவற்றை தொடர்புகொண்டு தங்களின் பிளாக்கிற்கு SEO சேவைகளை பெறலாம்.இதற்காக நீங்கள் பணம் செலுத்த வேண்டும். SEO சேவைகள் தற்பொழுது பெரும்பாலான நபர்களால் வழங்கப்படுகின்றது. உங்களால், அந்த வலைத்தளங்கள் வசூலிக்கும் கட்டணத்தை செலுத்த இயலவில்லை என்றால், பைவ்வர்(fiverr), பிரீலான்சர்(freelancer), அப்ஒர்க்(upwork) முதலிய தளங்களை நாடலாம். அங்கு குறைந்த விலையில் சில நபர்களால் SEO சேவைகள் வழங்கப்படும்.
6. பார்வையாளரை கவரும் தலைப்பு:
முன்பே தலைப்பை பற்றி கூறினேன். இன்னும் சில தலைப்பை பற்றிய முக்கியமான செய்திகளை பின்வருமாறு காணலாம். என்ன தான் நேரத்தை செலவழித்து தெளிவாக அனைவரையும் கவரும் வகையில் கட்டுரை எழுதினாலும், தலைப்பு சரியாக அமையவில்லை என்றால் நமது உழைப்பு வீணாக வாய்ப்புகள் உள்ளது. ஆமாம், இந்த கட்டுரையை படிக்கனுமா வேண்டாமா? என்ற கேள்விக்கான பதிலை பார்வையாளர்களுக்கு அளிப்பது நமது கட்டுரைக்கு நாம் இடும் தலைப்பே ஆகும். கட்டுரையின் தலைப்பு பார்வையாளரை மட்டும் கவராது, தேடுதளத்தையும் கவரும். தேடுதளம் நமது கட்டுரைகளையோ அல்லது செய்திகளையோ ஆர்கானிக் தேடுதலில் முதன்மைப்படுத்தும்.
இன்னொரு சிறந்த வழி என்னவென்றால் தலைப்பில் எண்களை சேர்ப்பது. உதாரணமாக, பிளாக்கில் டிராபிக் அதிகரிக்க சிறந்த 15 வழிகளை பார்க்கலாம். இதுபோன்று தலைப்பில் எண்களை சேர்த்தால், அது பார்வையாளர்களை பதிவை படிக்க தூண்டும்.
7. மெட்டா டெஸ்கிரிப்சன் அல்லது டேக் அமைத்தல்(meta describtion or tag):
நாம எல்லாருமே இதை கவனித்திருப்போம். அது என்னவென்றால், நாம ஒரு விசயத்தை தேடுதளத்தில் தேடியிருப்போம். அந்த தேடுதளம் நிறைய வலையமைப்பின் தொகுப்புகளை நமக்கு காட்டும். அந்த ஒவ்வொரு வலையமைப்பில் ஒரு தலைப்பு மற்றும் அதன் கீழ் ஒரு இரண்டு வரிகள் இருக்கும். அந்த இரண்டு வரிகளில் உள்ள சொற்களின் தொகுப்பே மெட்டா டெஸ்கிரிப்சன் எனப்படும்.
அந்த மெட்டா டெஸ்கிரிப்சன் படிப்பவர்களை கவரும் வகையில் அமைய வேண்டும். மிகவும் துல்லியமாக பார்வையாளர்களுக்கு புரியும் வகையில் இருந்தால் பார்வையாளர்கள் நமது பதிவுகளை படிக்க எண்ணுவார்கள். பார்வையாளர்கள் நமது பதிவை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான மெட்டா டெஸ்கிரிப்சனை கொடுக்க கூடாது. அவ்வாறு செய்தால் நமது வலைத்தளத்தின் மீது பார்வையாளர்கள் கொண்டுள்ள நம்பகத்தன்மை போய்விடும். எனவே நமது பதிவை பார்வையாளர்கள் கிளிக் செய்து பார்க்கவேண்டும் என்பதற்காக அதுபோன்று தவறான தகவல்களை பதிவிடக்கூடாது. அது நமது பிளாக்கின் தரத்தையும் குறைக்க வாய்ப்புள்ளது.
8. URL தேர்வு செய்தல்:
URL ஒரு வலைதளத்தின் தரத்தை தீர்மானிக்கும் என்றால் நம்புவீர்களா? உண்மை தான். URL தெளிவாக பார்வையாளர்களுக்கு புரியும் வகையிலும், நமது கட்டுரை தொகுப்பிற்கு ஏற்றவாறு அமைய வேண்டும். அவ்வாறு URL அமைத்தால் தேடுதளம் நமது வலையமைப்பை நன்கு மதிப்பிட்டு பின்னர் நமது கட்டுரைகளை முதலிடத்தில் தேடுதளத்தில் இடம்பெற செய்யும்.
9. வேகமாக இயங்கும் வலைத்தளம், வலையமைப்பு:
சில வலையமைப்புகளில் உள்நுழைய எண்ணினால் வெகுநேரம் ஆகும். இந்த வலையமைப்பு இந்த காலத்தில் loading ஆகாது போல என எண்ணி வேற வலையமைப்பில் உள்ள செய்திகளை படிக்க முனைவோம். அதுபோன்று ஒரு வலையமைப்பு loading ஆக நேரம் எடுத்துக் கொண்டால் பார்வையாளர்களுக்கு ஒரு விதமான எரிச்சலை ஏற்படுத்தும். எனவே வலையமைப்பின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். வேகத்தை அதிகரிக்க நிறைய வலைத்தளங்கள் சேவைகளை வழங்குகின்றன. அவற்றை நாடி இந்த பிரச்சனையை சரி செய்துகொள்ளலாம்.
10. பிளாக் கமெண்ட்டிற்கு பதில் அளித்தல்:
நமது பிளாக்கில் பார்வையாளர்கள் கமெண்ட் செய்துவந்தால், நமது பிளாக் பார்வையாளர்கள் மத்தியில் நன்கு பரிட்சயம் ஆகிவிட்டது என்றே அர்த்தம். அந்த கமெண்ட்டிற்கு பதில் அளித்தால் பார்வையாளர்களுக்கும் நமக்கும் ஒருவிதமான நம்பகத்தன்மை ஏற்படும். பிற பார்வையாளர்களின் கமெண்ட், புதிதாக நமது வலைப்பதிவை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு நமது பிளாக்கை பற்றி நல்ல அபிப்பிராயத்தை ஏற்ப்படுத்தும்.
11. புகைப்படங்களுக்கு ஏற்றவாறு பெயரிடுவது:
நமது பிளாக்கில் பதிவுகளுக்கு இடையிலோ அல்லது கடைசியிலோ புகைப்படங்களை பதிவேற்றுவோம். அவ்வாறு பதிவேற்றப்படும் புகைப்படங்களுக்கு கீழ் சரியான பெயரை பதிவேற்றினால், புகைப்படங்களை தேடுதளத்தில் தேடும் பார்வையாளர்கள், நமது பதிவுகளையும் பார்க்க வாய்ப்புகள் உள்ளது. எனவே புகைப்படங்களுக்கு சரியான பெயரை இடுவது அவசியம்.
12. உள்ளீடு இணைப்பு:
பிளாக்கிற்கு வரும் பார்வையாளர்கள் ஒரு கட்டுரை அல்லது செய்திகள் படித்த பின்னர், அடுத்த பதிவுகளையும் படிக்க வேண்டும். அவ்வாறு பார்வையாளர்களை நமது பிளாக்கை விட்டு வெளியேறாமல் அடுத்த பதிவுகளையும் படிக்க செய்யவேண்டும். அப்பொழுது தான் பிளாக்கின் பௌன்ஸ் ரேட்(bounce rate) குறையும். தேடுதளம் நமது வலைப்பதிவை முதன்மைப்படுத்தும். இதற்கு சரியாக ஒரு பதிவை படித்த பின்னர் அடுத்ததையும் படிக்கும் வகையில் உள்ளீடு இணைப்பை(Internal link) அமைக்க வேண்டும்.
13. பேக்லிங்க்(backlink) அமைத்தல்:
பேக்லிங்க் என்றால் என்ன? நமது வலைப்பதிவின் இணைப்பை பிற வலைப்பதிவு உரிமையாளர்கள் அவர்களது வலைப்பதிவில் உபயோகிப்பதே பேக்லிங்க் எனப்படும். நமது வலைப்பதிவு மிகவும் பிரபலமாக இருந்தால், பிறர் அதனை உபயோகிப்பர்.
நமது தளத்தின் லிங்க் பிற வலைப்பதிவுகளில் அதிகமாக பயன்படுத்தினால், நமது வலைப்பதிவு தேடுதளங்களால் பரிசீலனை செய்யப்பட்டு தேடுத்தளத்தில் முதன்மை இடத்தை பிடிக்கும்.
14. பதிவுகளை தொடர்ந்து பதிவிடுதல்:
பிளாக்கில் தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வந்தால், நமது பிளாக்கிற்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.
15. சமூக வலைத்தளங்கள்:
கோரா(Quora), ரெட்டிட்(reddit) போன்ற சமூக வலைத்தளங்கள் நமது பதிவுகளை பார்வையாளர்களுக்கு கொண்டு செல்லும் ஒரு கருவியாக உள்ளது. இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் ஒரு கணக்கை தொடங்குங்கள். அதில் கேள்விகளுக்கு பதிலை எழுதிவிட்டு, உங்களின் வலைதளத்தின் இணைப்பையும் சேருங்கள். கண்டிப்பாக இது பார்வையாளர்களை அதிகரிக்க சிறந்த வழி.
மேலே நான் கூறியுள்ள அனைத்தையும் உபயோகித்து பாருங்கள். அவற்றை பயன்படுத்தினாலே பிளாக் ஆரம்பித்த இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்து கண்டிப்பாக உங்களால் அதிக பார்வையாளர்களை பெற முடியும்.
0 Comments: