ஒரு ஏழை இருந்தான்.அவனுக்கு பணத்தாசை.முனிவர் ஒருவரிடம் சென்று அவரது உதவியை நாடினான்."எனக்கு ஒரு பூதம் வேண்டும்"என்று கேட்டான்.
"பூதத்தை என்ன செய்ய போகிறாய்?" என்று அவர் அவனிடம் கேட்டார்.
"முனிவரே,எனக்காக வேலை செய்வதற்குத்தான் பூதம் வேண்டும்" என்றான் அவன்.
முனிவரும் "இதோ,இந்த மந்திரத்தைப் பெற்றுக்கொள்.இதனை ஜபித்தால் பூதம் வரும்.நீ சொல்கின்ற வேலைகளையேல்லாம் செய்யும்.ஆனால் அதற்கு நீ எப்போதும் வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.தவறினாயோ,அது உனது உயிரை வாங்கிவிடும்"என்றார்.
அங்கிருந்து அவன் நேராக ஒரு காட்டிற்கு சென்றமர்ந்து,முனிவர் கொடுத்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான்.நெடுநேரத்திற்குப்பின் ஒரு பெரிய பூதம் அவன் முன் தோன்றி,"உன் மந்திர சக்திக்கு கட்டுப்பட்டுள்ளேன்.ஆனால் நீ எப்போதும் எனக்கு வேலை தந்துகொண்டே இருக்க வேண்டும். தவறினால் அடுத்த கணம் உன்னையே கொன்று விடுவேன்"என்றது.
உடனே அந்த மனிதன், "எனக்கு ஒரு அரண்மனையை கட்டு"என்றான்.அடுத்த நிமிடமே,"அரண்மனை தயார்"என்றது பூதம்."சரி,இப்போது பணம் கொண்டு வா"என்றான் அவன்.நொடியில்"இதோ நீ விரும்பிய பணம்"என்றது பூதம்."நல்லது,இந்த காட்டை அழித்து நகரமாக்கு"என்றாறன் அவன்.அடுத்த கணமே,"தயார்"என்றது பூதம்.'இனி இந்த பூதத்திற்கு கொடுக்க எந்த வேலையும் இல்லையே,எதைக் கொடுத்தாலும் ஒரு கணத்தில் செய்துவிடுகிறதே'என்று எண்ணிய அவனுக்கு இப்போது பயம் பிடித்துக்கொண்டது.
அதற்குள் அந்த பூதமும்,"வேலை கொடுக்கிறாயா?அல்லது உன்னை விழுங்கட்டுமா?"என்று உறுமியது.அஞ்சி நடுங்கிய அவன் முனிவரிடம் ஓடிச்சென்று,"சுவாமி என்னை காப்பாற்றுங்கள்"என்று கதறினான்.
அதற்குள் பூதமும் அங்கு வந்து அவனை பிடிக்க எத்தனித்தது.நடுநடுங்கி நின்றிருந்த அந்த மனிதனிடம் முனிவர்,"பயப்படாதே,நீ தப்ப நான் ஒரு வழி சொல்கிறேன்.அதோ அங்கு நிற்கும் நாயின் சுருண்ட வாலை அந்த பூதத்திடம் கொடுத்து அதனை நேராக்க சொல்"என்றார்.
அவனும் அவ்வாறே செய்தான்.பூதம் சுருண்ட நாய் வாலை கையில் பிடித்துக்கொண்டு,நிதானமாகவும்,எச்சரிக்கையுடனும் அதனை நிமிர்த்தியது.ஆனால் விட்ட மறு கணமே அந்த வால் மீண்டும் சுருண்டுகொண்டது. அதனால் அந்த வாலை நிரந்தரமாக நிமிர்த்த முடியவில்லை.இறுதியில் பூதம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு,தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சி அங்கிருந்து ஓடிவிட்டது.
இக்கதையை கூறிய சுவாமி விவேகானந்தர்,"இந்த உலகமும் நாயின் சுருண்ட வாலைப்போன்றதுதான்.அது ஒருபோதும் நேராகாது என்று தெரிந்து கொண்டால்,நாம் கொள்கை வெறியாளர்களாக மாறமாட்டோம்.கொள்கை வெறி மட்டும் இல்லாதிருந்தால் இந்த உலகம் இப்போதிருப்பதைவிட எவ்வளவோ மேன்மையுடன் இருக்கும்,என்கிறார்.
மனதை கெட்டழிகளில் செல்ல விடாமல்
இறைவழியில் சென்றால் நற்பேற்றை அடையமுடியும்...